தமிழகத்தின் கடலோர பகுதிகளை உருத்தெரியாமல் புரட்டிப் போட்ட ஆழிப்பேரலை ஊழித்தாண்டவமாடிய 15-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தமிழகம் மிகப் பெரிய ஆழிப்பேரலை தாக்கத்தை எதிர்கொண்டது.
இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இந்த ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி அலைகள் ஏற்பட்டன.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை அத்தனை கடலோர கிராமங்களிலும் ருத்ரதாண்டவமாடிவிட்டுப் போனது இந்த சுனாமிப் பேரலை.
சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள், அயர்ந்து உறங்கிய மீனவர்கள், சிறுகடை வியாபாரிகள் என நூற்றுக்கணக்கானோரை ஆழிப்பேரலை அள்ளிச் சென்றது
இதேபோல் கடலூர், புதுவை என பல கடலோர பகுதிகள் கண்ணீரில் தத்தளித்தன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 610 பேர் பலியாகினர்.
கன்னியாகுமரியின் மேலக்குடியில் ஒரே கிராமத்தில் 116 பேரை சுனாமி பேரலை சுருட்டிக் கொண்டு போனது.
தமிழகத்தின் ஒவ்வொரு கடலோர கிராமத்துக்கும் ஆழிப்பேரலையின் வடுக்கள் இன்னமும் இருக்கின்றன.
ஆழிப்பேரலை தாக்கிய 15-ம் ஆண்டு நினைவு நாளான இன்று உறவினர்கள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர். கடலுக்குள் பாலை ஊற்றி பூக்களை தூவி வழிபாடு நடத்தினர்.
சுனாமி நினைவு தூண் அமைக்கப்பட்ட இடங்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த துயரநாளை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. பல இடங்களில் மீன் சந்தைகள் மூடப்பட்டன.
சுனாமி தாக்கி 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும், தமிழகத்தின் கடலோரப் பகுதி மக்கள் மனங்களில் இன்றளவும் அதன் அச்சம் சற்றும் நீங்கவில்லை என்பதே உண்மை.