தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மின்னொளியால் மிளிர்ந்தது.

வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டு பாட திருப்பலியினை பேராலய அதிபர் பிரபாகர் நிறைவேற்றினார்.

அதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை இயேசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.

பின்னர், குழந்தை இயேசு பிறப்பின் போது ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

புகழ்பெற்ற சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அதேபோல் பெசன்ட் நகர் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

குழந்தை இயேசு மாட்டு தொழுவத்தில் பிறந்ததை நினைவு கூறும் வகையில் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விழாவையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

முன்னதாக, கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பல்வேறு வாகனங்கள் கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அதில் இயேசு பாலன் பிறப்பைக் குறிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு கிறிஸ்மஸ் பாடல்களைப் பாடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள செயிண்ட் மைக்கேல்ஸ் தேவாலயத்தில் மறைமாவட்ட ஆயர் தாமஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

கிறிஸ்து பிறப்பின் பெருமைகளை சொல்லும் வகையில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு குழந்தை இயேசுவை தொட்டிலில் கிடத்தும் நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு குழுமியிருந்த கிறிஸ்தவர்கள் உலக அமைதி மற்றும் சமாதானம் வேண்டி சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து புத்தாடை அணிந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை விடியவிடிய நடைபெற்றது. கிறிஸ்து பிறப்பை பறைசாற்றும் வகையில் பல லட்சம் செலவில் பொருட்களாலான குடில் குழந்தை இயேசு சொரூபங்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது.

மதுரையில் உள்ள பழமையான புனித வளனார் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் நள்ளிரவு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயம் முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே