துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் 28 நாட்கள் தனிமையில் இருக்க உத்தரவு

துபாயில் இருந்து விமானம் மதுரை வந்தவர்களுக்கு அடையாளமாக கையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமே கடந்த 2 வாரத்திற்கு முன் வரை, ‘கரோனா’ வைரஸ் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்த நோய் அறிகுறி இருந்தவர்களை மட்டுமே சுகாதாரத்துறையினர் விமானநிலையங்களில் பரிசோதனை செய்தனர்.

அறிகுறியில்லாதவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்து கண்காணித்தனர்.

இந்த முறையை பின்பற்றிய ஐரோப்பா நாடுகளில் தற்போது ‘கரோனா’ வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது.

அதனால், தற்போது ஆரம்பத்தில் கண்காணிப்பு இல்லாமல் விமானநிலையங்களில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள் மூலம் ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது.

எனவே, தற்போது வெளிநாடுகளில் இருந்து வருகிற அனைத்து பயணிகளையும், அறிகுறி இருக்கிறதோ, இல்லையோ அனைவரையும் ரத்தபரிசோதனை செய்து அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர்.

அவர்களை 15 முதல் 28 நாட்கள் வரை கண்காணிப்பு வளையத்தில் வைக்கவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், ஏற்கெனவே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையும் கண்காணித்து பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், துபாயில் இருந்து 124 பேர் நேற்று மதுரைக்கு வந்தனர். திருப்பரங்குன்றம் அருகே சின்ன உடைப்பு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும் நேற்று முதல் கட்டமாக நடைபெற்ற மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஒரு நாள் தனிமையாக இருக்க முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலையும் பரிசோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 124 பயணிகளும் சொந்த ஊருக்கு செல்ல சுகாதாரத் துறை அதிகாரிகள் அனுமதியளித்தனர்.

இருப்பினும் அவர்கள் அனைவரின் கைகளிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் உறுதிமொழிப்பத்திரமும் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே