தமிழக முதல்வரிடம் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருவதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

பிரதமர் மோடியிடம் நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்குக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

முதலில் ஒன்று, இரண்டு என்று தொடங்கிய இதன் பாதிப்பு, வேகமாக பரவி வருகிறது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உள்ளது.

இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்நோய் மேலும் வேகமாக பரவும் அபாயம் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்நோயின் தாக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் உரையாற்றினார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த நேரத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இந்த வைரசை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த அறிவுரையை ஏற்று தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் நாளை ஓட்டல்கள், டாஸ்மாக், லாரிகள், அரசு பேருந்துகள், பறக்கும் ரயில்கள் உள்ளிட்டசேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடியிடம் நாளை நடைபெறும் மக்கள் ஊரடங்குக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே