இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி நாட்டின் அரசியல் சட்டத்தை, இந்திய அரசியல் நிர்ணயசபை ஏற்றுக் கொண்டது.

இந்தச் சட்டம் 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்ததால் அந்த நாளை நாம் குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பு என்று பெருமையைக் கொண்டது.

இதன் அடிப்படையில்தான் இந்தியா பொதுவுடமை மற்றும மதச்சார்பின்மை கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ஏழு அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் அரசியல் சட்டத்தை நிர்ணயம் செய்த அண்ணல் அம்பேத்காரை கவுரவிக்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டு இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மேலும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர்களும், முன்னாள் பிரதமர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்,
கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்காது என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே