மகாராஷ்டிரா அரசியல் : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சார்பில் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகினர்.

அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாஜக சார்பில் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

தேவேந்திர ஃபட்னாவிசை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கான கடிதம் மற்றும் 54 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அஜித் பவார் ஆளுநரிடம் அளித்த கடிதம் ஆகியவற்றை சீலிடப்பட்ட உறையில் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைத்த நிலையில், மனு மீதான உத்தரவை இன்று காலை 10-30 மணிக்கு பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இதனால் எத்தனை நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவது குறித்து உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதை மதித்து நடப்போம் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளன.

தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று பாஜக-வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் பாஜக- ஜனநாயக விரோத போக்கை கடைப்பிடிப்பதால், அதற்கு எதிராக சட்ட மற்றும் அரசியல் ரீதியில் பாடம் புகட்டப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே