சென்னை திருமழிசையில் வருகின்ற 10ஆம் தேதி காலை கோயம்பேடு தற்காலிக மார்க்கெட் செயல்படத் துவங்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5ஆம் தேதி முதல் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை மூடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடிகள் தற்காலிகமாக செயல்படும் என சிஎம்டிஏ அறிவித்தது,
அதற்கான பணிகளும் அங்கு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனக்கூறி கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி உரிமையாளர்கள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்தால் மட்டுமே அங்கு செல்வதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது அங்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளும் மும்முரமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடிய காய்கறிகள் முற்றிலுமாக வரத்து நின்றுவிட்டதால் சென்னையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.