டெல்லி தேர்தல் முடிவு பாஜகவுக்கான சம்மட்டி அடி : திருமாவளவன்

டெல்லி தேர்தல் முடிவு பாஜகவுக்கான சம்மட்டி அடி என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் மோடியும், அமித்ஷாவும் முகாமிட்டு பிரச்சாரம் செய்தாலும் அவர்கள் வியூகம் எடுபடவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும், சங்பரிவார் அமைப்புக்கும் மக்கள் கொடுத்த சம்மட்டி அடி என்றும் கூறினார். 

மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டிய அவர், அதிமுக அரசு டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது.

இதை அறிவிப்போடு விட்டு விடாமல் சட்டமாக கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார். 

பாஜகவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள் சட்டமன்ற தேர்தலில் புறக்கணித்துள்ளார்கள், இதன் மூலம் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் பாஜகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் உத்ரகாண்ட் மாநிலத்தில் அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேதனை தருவதாக உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு தலித் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமல்ல இடஒதுக்கீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் பாதிப்பாகத் தான் அமையும் என்று கூறினார்.

இந்த இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து திமுகவுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம் என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே