ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதிலடி

தஞ்சையை பாலைவனமாக்கும் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் தான் வித்திடப்பட்டது என மு.க ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை சுட்டிக்காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாடகமாடுவதாக மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் பதில் அறிக்கை வெளியிட்டார்.

அதில், முதலமைச்சரின் அறிவிப்புக்கு விவசாயிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், மக்களின் ஆதரவு பெருகி வருவதை பொறுக்க முடியாமல் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.

பெட்ரோலியத் துறை இணை அமைச்சராக டி.ஆர் பாலு இருந்தபோது தான் தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்க மு.க ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா விவசாயிகளை பாதுகாக்கத் தவறிய திமுக, இன்று அரசு துணிச்சலுடன் எடுத்த நடவடிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று மக்களை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் செயலை செய்து கொண்டிருப்பதாக கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் தனிச்சட்டம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே