திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதமிருப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா நோய்தொற்று காரணமாக, பக்தர்கள் கோயிலில் தங்கி விரதம் இருக்க தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் தினமும் 10,000 பக்தர்கள் மட்டும், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை (20.11.2020) நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி ஆகம விதிப்படி, கடற்கரையிலும், 21ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்திலும் பாரம்பரிய வழக்கப்படி நடத்த உத்தரவிட வேண்டும் என ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும் என்றும் திருக்கல்யாணம் 108 மகாதேவர் சன்னதி முன்பும் நடைபெறும் எனக்கூறினார்.

இதனைதொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்த நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கக்கூடாது என்றும்; பக்தர்கள் நிகழ்வை காணும் வகையில், பாகுபாடின்றி அனைத்து தொலைக்காட்சிகளும் நிகழ்வை ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே