சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமா திரையிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வாட்டும் உணவுப் பஞ்சம் ஒருபுறமும் பல ஆண்டுக்காலமாக நிலவி வரும் உள்நாட்டுப் போர் மறுபுறமுமாக வாழத் தகுதியற்ற பூமியாக திகழ்கிறது, கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா. 1991-ஆம் ஆண்டிலிருந்தே வன்முறை மோதல்களால் அந்நாடு பாதிக்கப்பட்டு வருகிறது.
அங்கு அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு, தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சோதனைச் சாவடிகள், ஓட்டல்கள் மற்றும் கடலோரப் பகுதிகள், திரையரங்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.
குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் தற்கொலைப்படை தாக்குதலுக்கான களமாக மாறியதால் அங்கு 1991-ல் திரையரங்குகள் மூடப்பட்டன.
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மொகாடிஷுவில் உள்ள நேஷனல் தியேட்டரில் பலத்த பாதுகாப்புடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதனால் ரசிகர்கள், சினிமா கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நாள் சோமாலிய மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றும் பல வருட சவால்களுக்கு பிறகு புதிய நம்பிக்கை துளிர்த்துள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.