” அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பார்கள். ஆனால், திமுக அரசு அழாத குழந்தைகளுக்கும் பால் கொடுக்கும் தாய்” என முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் பேசுகையில் குறிப்பிட்டார்.
சென்னை அரசு மருத்துவ கல்லூரியில், ” மக்களை தேடி மருத்துவம்” திட்டத்திற்கான மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது: விளிம்புநிலை மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத்தினாளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நவீன கருவிகள் வாங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைவரின் கோரிக்கைக்கும் செவி சாய்க்கும் ஆட்சியாக இருக்கும். 4000 மேற்பட்ட குழந்தைகளுக்கு முதல்வரின் வி ரிவான காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், 1,35,000க்கு மேற்பட்டோருக்கு காது கேட்கும் கருவிகள் தரப்பட்டு உள்ளன.மக்களை தேடி மருத்துவம் திட்டம் அரசுக்கு சிறப்பான பெயரை தேடி தந்துள்ளது. முதலில் அரசை தேடி மக்கள் வந்தனர். தற்போது மக்களை தேடி அரசு செல்கிறது. மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
கருணாநிதி வழியில் மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறோம். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என கூறுவார்கள். ஆனால், அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் தாயாக திமுக அரசு இருக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.