திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழனியில் 22வது வார்டு கொடிக்காக்காரர்வலம் என்ற குடியிருப்பு பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இன்று காலை திடீரென குடிசை வீட்டில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் அடுத்தடுத்துள்ள ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் என 7 வீடுகளுக்கு தீ பரவியது. இந்த 7 வீடுகளும் தீயில் கருகி நாசமானது.
தீப்பற்றி எரிய தொடங்கிய உடனேயே அப்பகுதி மக்கள் பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்று வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டுள்ள 7 வீடுகளில் 2 வீடுகளில் மட்டுமே ஆட்கள் உள்ளனர். மற்றவர்கள் யாரும் குடியிருப்பில் குடி இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து பழனி நகர போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி சத்தியராஜ் வந்துள்ளார். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.