கொரோனாவின் கோரப்பிடியில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கித்தவிக்கும் சூழலில் ஹண்டா வைரஸினால் சீனாவில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் உனான் மாகாணத்தில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஹண்டா வைரஸால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் அந்த பேருந்தில் பயணம் செய்த மேலும் 32 பேருக்கும் ஹண்டா வைரஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஹண்டா வைரஸ் (Hanta Virus) என்றால் என்ன?
ஹண்டா வைரஸ்கள், எலி (Rodent) வகையைச் சேர்ந்த பிராணிகளின் மூலம் பரவுவதாக CDC எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி, ஹெமோரஜிக் காய்ச்சலையும் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹண்டா வைரஸ் எப்படி பரவுகிறது?
இது காற்றின் மூலமோ, மனிதர்களின் மூலமாகவோ பரவாது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எலி, அணில் மற்றும் அந்த குடும்ப வகையினை சார்ந்த விலங்குகளின் கழிவு, சிறுநீர், எச்சில் ஆகியவற்றின் மூலம் நோய் தொற்று ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் ஹண்டா வைரஸ் பாதிப்புள்ளவர்கள், மற்றவர்களை கடித்தால் அதன் மூலமும் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது, ஆனால் இந்த முறையில் நோய் தொற்று பரவ மிகக்குறைந்த அளவிலேயே வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹண்டா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள்:
மிகுந்த உடல் சோர்வு, காய்ச்சல், தசை வலி, தலை வலி, தலை சுற்றுதல், குளிர் மற்றும் வயிறு சார்ந்த பிரச்னைகள் ஹண்டா வைரஸின் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகளை அலட்சியமாக விட்டால், இருமல் அதிகரித்து, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும்.
மேலும் இந்த வைரஸ் பாதிப்பால் 38% உயிரிழக்க (Mortality Rate) வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எலி மற்றும் அணில் வகைகளை சார்ந்த (Rodent) விலங்குகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலமே ஹண்டா வைரஸ் தாக்குதலில் இருந்த தப்பிக்க முடியும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் உலக நாடுகள் பீதியில் இருக்கும் நிலையில், ட்விட்டரில் ஹண்டா வைரஸ் ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.