தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது ரஜினியுடன் தர்பார் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் உலக அளவில் மிகப் பிரபலமான VOGUE நாளிதழ் தனது பன்னிரண்டாவது வருடத்தைக் கொண்டாடும் வகையில் துல்கர் சல்மான், மகேஷ் பாபு மற்றும் நயன்தாராவை இதழின் அட்டை படத்தில் இடம்பெற செய்து கௌரவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு போட்டி கொடுக்கும் நயன்தாரா, ஊடகங்கள் ரசிகர்கள் என எவரையும் சந்திக்காமல் இருப்பதை தனது வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஊடகங்களை தவிர்த்த நயன்தாரா தற்போது VOGUE இதழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார்.
அந்த பேட்டியில் ஊடகங்களை தவிர்ப்பது குறித்த கேள்விக்கு தான் என்ன நினைக்கிறேன் என்பதை எப்போதுமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இதற்கான காரணம் நான் பலமுறை ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் சினிமாவில் எப்போதும் ஆண்களுக்கு மட்டுமே எல்லா அதிகாரங்களும் ஏன் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள நயன்தாரா, உண்மையில் பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என கேட்க தயங்குவதே பிரச்சினைகளுக்கான காரணம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்கும்போது வரவேற்பு கிடைக்கும் நிலையில், ஏன் ஹீரோக்கள் மையப்படுத்திய கதை படங்களில் நடிக்கிறீர்கள் எனும் கேள்விக்கு எவ்வளவு முறைதான் முடியாது என சொல்லிக்கொண்டே இருக்க முடியும் என்றும், சில நேரங்களில் அதற்கான வாய்ப்புகள் இருப்பதில்லை என்றும் நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் ஆரம்ப காலகட்ட விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த நயன்தாரா தன்னை ஏளனமாக பார்த்தவர்களுக்கு தனது வெற்றிப் படங்களே பதிலாய் அமைந்திருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.