உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கும்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய்-இன் பதவி காலம் அடுத்த மாதம் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது.

பொதுவாக தலைமை நீதிபதி ஓய்வு பெறும் போது அடுத்து அந்த பொறுப்புக்கு ஒருவரை பரிந்துரை செய்வது மரபு.

அந்தவகையில் மூத்த நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.பாப்டேவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கோரி தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால் எஸ்.ஏ.பாப்டே, 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை பதவியில் இருப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் எஸ்.ஏ.பாப்டே.

1956-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பிறந்த எஸ்.ஏ.பாப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தவர்.

1978 ஆம் ஆண்டு நாக்பூர் மகாராஷ்டிரா உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராக தன்னுடைய பணியை தொடங்கினார்.

பின்னர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக இருந்த போது, மகாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

2012-ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.ஆதார் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்த அமர்வுகளில் எஸ்.ஏ.பாப்டேவும் இடம் பெற்றிருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே