மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை ஆரே காலனியில் மெட்ரோ ரயில் பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன் மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.
இதையடுத்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. இதை கண்டித்து ஏராளமான இயற்கை ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மரங்களை வெட்ட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக ஆரே உள்ளதாக வாதாடப்பட்டது.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆரே பகுதி வளர்ச்சி இல்லாத மண்டலமாக உள்ளது என்றும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படவில்லை எனவும் வாதாடினார்.
சுற்றுச்சூழல் மீது தங்களுக்கும் அக்கறை உள்ளதாக குறிப்பிட்ட அவர் மேலும் மரங்கள் வெட்டப்படாது என உறுதியளித்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஆரே பகுதியில் மரங்களை வெட்ட இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.