JUST IN : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் மத்திய புலனாய்வுத் துறையினரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், அவரைக் கைது செய்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், புதன்கிழமை காலை 3 அமலாக்கத் துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தலாம், தேவை ஏற்பட்டால் அவரைக் கைது செய்யலாம் என உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, புதன்கிழமை காலை 8.15 மணிக்கு திகார் சிறைக்கு அமலாக்கத் துறையின் விசாரணை அதிகாரிகள் மூவர் குழு சென்றது.

அங்கு அவர்கள் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.

பின்னர், சட்டவிரோதப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

இந்தநிலையில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை அக்டோபர் 21க்கு ஒத்திவைக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே