பிரசவத்தின்போது ஊசி வைத்து தைக்கப்பட்ட விவகாரம் – 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்

இராமநாதபுரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்துக்குப்பின் உடைந்த ஊசியுடன் வைத்து தையல் போட்டதால், உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர், செவிலியர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உச்சிப்புளியை அடுத்த மரவெட்டி வலசை பகுதியை சேர்ந்த ரம்யா பிரசவத்துக்காக உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு கடந்த 19 ந் தேதி ரம்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் ரம்யாவுக்கு தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப்பார்த்ததில் அடிவயிற்றுப் பகுதியில் உடைந்த ஊசியின் பாகம் இருப்பது தெரியவந்தது.

உடனே அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு மீண்டும் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சம்பவ தினத்தன்று உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர் கால தாமதமாக வந்ததால் செவிலியர்கள் இருவர் பிரசவம் பார்த்து, தையல் போட்டதாக பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பிரசவத்துக்குப்பின் தையல் போட்டபோது தவறு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் பத்மா தலைமையிலான 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.

உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் யாஷிர், செவிலியர் அன்புச்செல்வி மற்றும் சத்யபாமா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே