இஸ்லாமிய பேராசிரியர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்!

உத்திரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட இஸ்லாமிய உதவிப் பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதச்சார்பின்மையை உயிர்நாடியாக கொண்டு உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவில் இஸ்லாமிய பேராசிரியர் வேண்டாம் என கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் அவலம் அரங்கேறி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் இந்து மாணவர்களே பயின்று வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள சமஸ்கிருத துறைக்கும், உதவிப் பேராசிரியராக ஃபைரோஸ் கான் என்ற இஸ்லாமியர் கடந்த ஐந்தாம் தேதி நியமிக்கப்பட்டார்.

ஃபைரோஸ் கானின் நியமனத்தை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் போராட்ட கோஷங்களின் வெளிப்படும் கருத்து என்னவென்றால்,

  • மதன் மோகன் மாளவியாவால் தொடங்கப்பட்ட பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு இஸ்லாமியர் எப்படி உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
  • இது பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்கு புறம்பானது.
  • எனவே அவரை உடனடியாக மாற்றி விட்டு அந்த இடத்திற்கு வேறொரு இந்து உதவி பேராசிரியரை நியமிக்க வேண்டும் என மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் இந்த போராட்டத்திற்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி ஆதரவு தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆவலுடன் பல்கலைக்கழக வாசலில் காலடி எடுத்து வைத்த ஃபைரோஸ் கான் மாணவர்களின் போராட்டத்தால் மனவேதனையுடன் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறி உள்ளார்.

மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், போராட்டம் தணிந்ததும் ஃபைரோஸ் கான் மீண்டும் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுவார் என்று உறுதி அளித்துள்ளது.

மாணவர்களுக்கு அறிவு புகட்டும் கல்வித்துறையில் மதம் இடையூறாக இருக்கக்கூடாது என்ற ஃபைரோஸ் கானின் ஆதங்கம் மாணவர்களின் காதுகளில் எட்டி அவர் விரைவில் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் நியாயமான குரலாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே