மணப்பாறை : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை – 14 வயது சிறுவன் கைது

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 9 வயது சிறுமி, 14 வயது சிறுவனால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மணப்பாறை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி; அருகே உள்ள அரசுப் பள்ளியில் 3ம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்புக்கு செல்ல காத்திருந்தார்.

அவரது வீட்டருகே உறவினரான 14 வயது சிறுவன் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார்; சிறுவனும் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு முடித்து 9ம் வகுப்பு செல்ல காத்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், சிறுவனும் சிறுமியும் சிறுவனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிற்பகல் 2 மணியளவில் சிறுமி, இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, சிறுமி மல்லித் தோட்டத்தில் இறந்து கிடப்பதாக சிறுமியின் தாத்தாவிடம், அந்த14 வயது சிறுவன் பதற்றத்துடன் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார்.

அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் நடந்த இடத்தில், 14 வயது சிறுவன் அணியும் பள்ளிச் சீருடையான ஒரு கால்சட்டை கிடந்துள்ளது.

மேலும், ரத்தக்கறை படிந்த கல், சிறுமியின் ஹேர் பேண்ட், துணிகள் ஆகியவையும் கிடந்துள்ளன.

போலீசாரின் சந்தேகம், தகவல் அளித்த 14 வயது சிறுவன் மீது விழுந்தது.

விசாரணையில், அந்த கால்சட்டை தனதல்ல என சிறுவன் மறுத்த நிலையில், சிறுவன் உடையதுதான் என சிறுவனின் தங்கை உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்திய நிலையில், மல்லித் தோட்டத்தின் ஒரு பகுதியில் பூமியில் புதைத்து வைத்திருந்த சட்டையை எடுத்துக் கொடுத்தார் சிறுவன்.

பின்னர் அவரது வீட்டில் சோதனையிட்டபோது, பள்ளிச் சீருடைகளில் ஒரு கால்சட்டை குறைந்தது உறுதியானது.

போலீசார் சிறுவனிடம் விசாரித்ததில் பகீர் தகவல்கள் வெளியாகின.

சிறுவன், தனது தந்தையின் ஆன்ட்ராய்டு செல்போனை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.

நண்பர்களின் அறிமுகத்தால் அவர் யூடியூப் உள்ளிட்ட சில இணையதளங்களில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று, அவர் சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

சிறுவனுடன் கடுமையாகப் போராடிய சிறுமி, அவரிடம் இருந்து தப்ப முயன்றுள்ளார்; மேலும் பெற்றோரிடம் கூறி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

பயந்து போன சிறுவன், சிறுமியை அடித்துக் கீழே தள்ளி, அங்கிருந்த கல்லை எடுத்து சிறுமியின் தலைமீது போட்டுள்ளார்;

அதில், சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுமி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.

இதையடுத்து சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்

வீடுகளில் சிறுவர், சிறுமியரிடம் செல்போன் கொடுப்பதில் உள்ள பிரச்சனைகளை பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டும் போலீசார் அறிவுறுத்தியுள்னர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே