வைரமுத்து குறித்து தவறாக நித்யானந்தா தான் பேச சொன்னதாக பகீர் குற்றச்சாட்டு – சிறுமி வாக்குமூலம்

ஒரு காலகட்டத்தில் நித்யானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக செல்வாக்கு மிகுந்தவராக இருந்த ஜனார்த்தன் சர்மா இன்று நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

குஜராத் அஹமதாபாத் ஹத்திஜன் பகுதியில் அமைந்துள்ளது நித்யானந்தா ஆசிரமம்.

நேரடியாக நித்யானந்தாவால் நிர்வகிக்கப்படும் இந்த ஆசிரமத்தில் 50 க்கும் அதிகமான குழந்தைகள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துவந்த நிலையில், நித்யானந்தாவின் செயலாளர்களில் ஒருவரான ஜனார்த்தனன் சர்மா சாமியாருக்கு எதிராக புகார் குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.

தனது 3 மகள்களில் இருவரை மீட்டுள்ள நிலையில், ஒரு மகளை நித்யானந்தா, அவரது ஆசிரமவாசிகள் கடத்திவிட்டதாக புகார் அளித்தார்.

அதிரடியாக களம் இறங்கிய போலீசார் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.

ஆனால் காணாமல் போனதாக சொல்லப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆசிரம நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் வெடித்தது.

பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தாலும் தற்போது சர்மாவின் மகள் ரூபத்தில் இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ப்ராணப் பிரியா, பிரிய தத்துவா என்ற ஆசிரம நிர்வாகிகளை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் அஹமதாபாத்திலிருந்து பேசிய சர்மாவின் மகள், ஆசிரமத்திற்குள் சிறுமிகள் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

கெட்டவார்த்தை சொல்லிக்கொடுத்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தங்களை பேசவைத்ததாகவும் அச்சிறுமி பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆசிரமத்தில் வசித்து வந்த தனக்கே, தனது மகளின் நிலை குறித்த தகவலை சொல்லவில்லை என்று சொல்லும் சர்மா, நித்யானந்தாவுக்கு தெரியாமல் மடத்திற்குள் எதுவும் நடக்காது என்கிறார்.

பெங்களூரு பிடதி ஆசிரமத்திலிருந்து ரகசியமாக கிளம்பிய நித்யானந்தா, தனது மகளை கடத்திச்சென்றுள்ளதாக சர்மா குற்றம் சாட்டுகிறார்.

தான் எதிர்கொண்ட சர்ச்சைகளை விட பூதாகரமான பிரச்னைகளை பலர் எதிர்கொண்டுவருவதாக அம்பலப்படுத்துகிறார் சர்மா.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே