கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயம்

தமிழகத்தின் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாக பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி தலைமையிடமாகக் கொண்டு 2 வருவாய் கோட்டங்கள், 6 வருவாய் வட்டங்கள், மூன்று காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், 3 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 6 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதியுடன் இன்று புதிய மாவட்டமாக உதயமாகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாக பணிகளை இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து சிறப்பு குறைதீர் திட்ட பயனாளிகள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, அன்பழகன், உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜ் மேற்பார்வையில் டி.ஐ.ஜி., சந்தோஷ் குமார் தலைமையில் எஸ்.பி.,க்கள் ஜெயச்சந்திரன், அபினவ், மயில்வாகனன், அரவிந்தன், 3 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 15 டி.எஸ்.பி.,க்கள் உட்பட மொத்தம் ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவில் முதலமைச்சர் பங்கேற்று கல்லூரி புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழா திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே