JUST IN : மும்பையில் 162 எம்.எல்.ஏக்களின் அணிவகுப்பு தொடங்கியது

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் மும்பையிலுள்ள ஹயாத் நட்சத்திர விடுதியில் கூடியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சியமைப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக சரத் பவாரின் அண்ணன் மகனும் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவருமான அஜித் பவாரின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைத்தது.

மீண்டும் தேவேந்திர பட்னவிஸ் முதல்வரானார். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனையடுத்து பா.ஜ.கவுக்கு போதியப் பெரும்பான்மை இல்லாத நிலையிலேயே ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார் என்று சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் நாளை தீர்ப்பு வரவுள்ளது.

இந்த நிலையில் தங்களுடைய பலத்தை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு நிரூபிக்கும் வகையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் மும்பையிலுள்ள ஹயாத் ஹோட்டலில் ஒன்று திரண்டுள்ளனர்.

நாங்கள் 162 என்ற பதாகைகளை முன்னிலைப்படுத்தி அவர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை எங்களிடம்தான் உள்ளது என்று வலியுறுத்துகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, அசோக் சவான் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே