இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இதுவரை சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்கள் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள இரு தொகுதிகளிலும் 56 லட்சம் ரூபாய் பணம், 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பரிசு பொருட்கள், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான இதர பொருட்கள் என சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
நாங்குநேரில் திமுக எம்.எல்.ஏ.சரவணகுமார் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சீமானின் சர்ச்சை குறித்த அறிக்கையும் ஆணையத்துக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.