புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமி அரசுக்கு ஆளுநர் உத்தரவு..!!

புதுச்சேரி அரசை வரும் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜ்நிவாஸ் வந்த முதல்வரிடம் நேரடியாக இத்தகவல் துணைநிலை ஆளுநர் தமிழிசை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதனால், புதுவை சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 10 ஆகவும், அரசை ஆதரிக்கும் திமுக 3, சுயேச்சை ஒருவர் என 14 எம்எல்ஏக்கள் பலம் மட்டுமே உள்ளது. 

எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, பாரதிய ஜனதா 3 என 14 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. சபாநாயகருடன் சேர்த்து ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சம பலம் உள்ளது. தற்போது சட்டப்பேரவையில் மொத்த எம்எல்ஏக்கள் 28 பேர் உள்ளனர்.

இதில், 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால்தான் ‘மெஜாரிட்டி’ கிடைக்கும். ஆளும் காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

நாராயணசாமி தார்மீக அடிப்படையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அதோடு, ஆளுநர் மாளிகையில், நாராயணசாமி அரசை பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் மனுவும் அளித்தன.

இந்த மனு மீது புதிதாக இன்று (பிப்.18) பதவியேற்ற துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசையை எதிர்க்கட்சிகள் மீண்டும் கூட்டாகச் சென்று சந்தித்து இக்கருத்தை மீண்டும் வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து, உயர் அதிகாரிகளுடன் தமிழிசை கலந்து ஆலோசித்தார். அதைத் தொடர்ந்து ராஜ்நிவாஸ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி உட்பட 14 எம்எல்ஏக்கள் 17-ம் தேதி ராஜ்நிவாஸ் வந்து அனைவரும் கையெழுத்திட்ட மனு தந்திருந்தனர். தற்போதைய புதுச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

சட்டப்பேரவையில் அரசானது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரியுள்ளனர். அதே கோரிக்கையை இன்றும் துணைநிலை ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது புதுச்சேரி அரசில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவற்றில் உள்ள எம்எல்ஏக்கள் தலா 14 பேர் உள்ளதை ஆளுநர் கேட்டறிந்தார். சட்டவிதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைக் கலந்து ஆலோசித்தார்.

அதைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட முடிவுகளை ராஜ்நிவாஸ் வந்த முதல்வர் நாராயணசாமியிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 22-ம் தேதி கூட்டப்பட வேண்டும்.

இக்கூட்டத்தில், ஒரேயொரு நிகழ்ச்சி நிரலாக, அரசானது பெரும்பான்மையுடன் உள்ளதா என்பதற்கான வாக்களிப்பு கைகளைக் காண்பிப்பது மூலம் நடத்தப்படும்.

இந்நிகழ்வு முழுக்க வீடியோ பதிவாக்கப்பட வேண்டும். பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பானது வரும் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் நிறைவடைய வேண்டும்.

எக்காரணம் கொண்டும் இந்நிகழ்வைத் தள்ளிவைக்கவோ, தாமதப்படுத்தவோ, நிறுத்தி வைக்கவோ கூடாது.

சட்டப்படியும் அமைதியான முறையிலும் வாக்களிப்பு நடப்பதை சட்டப்பேரவைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே