தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு..!!

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை வெள்ளிக்கிழமை(மே7) பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று புதிதாக வெற்றி பெற்ற தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். மறுநாள் 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.

அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார்.

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டிக்கு ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

மேலும் கு.பிச்சாண்டிக்கு ஆளுநர் மற்றும் முதல்வர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.நாளை சட்டப்பேரவை கூடும் போது, புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் கு.பிச்சாண்டி.

1996 முதல் 2001 வரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் பிச்சாண்டி . நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவரையே கூட சபாநாயகராக தேர்வு செய்ய நாளை மறுநாள் அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன. இதேபோல் துணை சபாநாயகர் தேர்வும் நாளை மறுநாளே நடைபெறவுள்ளது.

சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், வழக்கறிஞருமான ராஜேந்திரன் அல்லது ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு ஆகிய இருவரில் ஒருவர் துணை சபாநாயகர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே