இலங்கையில் நாளை முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை மக்கள் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டுவரும் நோக்குடன் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஏப்ரல் 20, திங்கள் முதல் அந்தந்த மாவட்டங்களிலும் மாவட்ட பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுதல் மற்றும் தளர்த்தப்படுதல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 திங்கள் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

அதன் பின்னர் மீண்டும் அறிவிக்கும் வரை இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை அமலில் இருக்கும்.

மேலும் கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவதுகொடை, அகுரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும். 

இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே