புத்தாண்டு பிறப்பையொட்டி தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு…!

புத்தாண்டு பிறப்பையொட்டி தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சென்னை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் அங்கு திரண்டிருந்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தணையில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நள்ளிரவு 12மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உலக மக்க நலமுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சவேரியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் நாசரேன் சூசை தலைமையில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தணை நடைபெற்றது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்னை நடைபெற்றது.

திருச்சி, கொடைக்கானலில் உள்ள பல்வேறு தேவாலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன்கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.நள்ளிரவு 12 மணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் இருந்த மூலவருக்கு தீபாரதனையும் காட்டப்பட்டது. பக்தர்கள் விடிய விடிய மலைக் கோயில் மாட வீதிகளில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை, மலையனூர் உள்ளிட்ட கோவில்களில் நள்ளிரவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி எனப்படும் தெலுங்கு புத்தாண்டுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டுமென ஆந்திர அரசு உத்தரவிட்டிருந்ததால், சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. இருப்பினும் திரளான பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையானை தரிசித்து சென்றனர்.

சென்னை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் புத்தாண்டையொட்டி அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று ஏழுமலையானை வழிபட்டனர்.

கோவை புளியகுளம் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலில் திரளான பக்தர்கள் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா திருக்கோவிலில் உலக நன்மை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. சிவனடியார்கள் சங்கு முழக்கத்துடன் சாய்பாபாவிற்கு தீபதூப ஆராதனை செய்து வழிபட்டனர்.

சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள ஓம் காளி ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை பக்தர்கள் கண்டு தரிசித்தனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே