ஊரடங்கு படிப்படியாக தளர்வு, நீட்டிப்பை முன்கூட்டியே அரசு அறிவிக்க வேண்டும்! – டிடிவி தினகரன்

ஊரடங்கு நீட்டிப்ப மற்றும் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் படிப்படியாக தளர்வு தொடர்பான அறிவிப்பை அரசு முன்கூட்டியே வெளியிட வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான இரண்டாம் கட்ட ஊரடங்கிற்கு, பெரும்பாலான மக்கள் அளித்த ஒத்துழைப்பினால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்நோய் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. 

ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் அரசு வெளியிட்ட சில அவசரகோல உத்தரவுகளினால் மக்களிடம் ஏற்பட்ட பீதி கலந்த பதற்றத்தினால் ஊரடங்கு என்பது அர்த்தமற்றதாக மாறியது.

ஊரடங்கு மே 3ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் அதனை முழுமையாக முடிவுக்கு கொண்டுவருவது நல்லதல்ல; படிப்படியாகவே தளர்த்த வேண்டும் என்ற வல்லுநர் குழுவின் அறிக்கையைக் கருத்தில்கொண்டு ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை மக்களுக்கு குழப்பம் ஏற்படாதபடி தெளிவான நெறிமுறைகளோடு முன்கூட்டியே அரசு அறிவித்திடவேண்டும்.

ஏழை, எளிய அடித்தட்டு மக்களை தொடர் ஊரடங்கு மொத்தமாக புரட்டிப்போட்டிருக்கிறது.

அவர்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பது பெரும் சவாலாகவே இருக்கிறது.

எனவே, ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், ஏழை எளிய நடுத்தர மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட ரூ.1000, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் கட்டமாக அறிவிக்கப்பட்ட ரூ.1000 ஆகியவை முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்.

தற்போது, ஊரடங்கை நீட்டித்தால் கூடுதல் உதவியாக குறைந்த பட்சம் மேலும் ரூ.2000/- ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

இதற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியைக் கேட்டுப் பெற வேண்டும். கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்தது என்று எடப்பாடி பழனிசாமி இருந்துவிடக் கூடாது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கொரோனா பரவலைத் தடுப்பது பெரும் சவாலாகிவிடும்.

அத்தியாவசியப் பொருட்கள் வீட்டு வாசலிலேயே கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தாத வரை இது சாத்தியமில்லை.

அனைவரும் வீட்டிலேயே இருங்கள்; அத்தியாவசியப்பொருட்கள் அனைத்தும் உங்கள் வீட்டு வாசலுக்கே வரும்’ என்ற நிலையை அரசு உருவாக்கிட வேண்டும்.

வணிகர்களை இணைத்து சிற்றுந்துகள், பேருந்துகளை நடமாடும் கடைகளாக மாற்றி பொருட்களை விநியோகித்தால் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடுவதைக் கட்டுப்படுத்தலாம்

இவற்றை எல்லாம் விட முக்கியமாக, சோதனைகளை அதிகப்படுத்தியதால் தான் பாதிக்கப்பட்டவர்களை அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்க முடிகிறது என்று மருத்துவக்குழுவினர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இந்த நேரத்திலாவது மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் நகர்ப்பகுதிகளில் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.

இதற்கு தேவையான பி.சி.ஆர் கருவிகளை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும். மேலும் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் வெளிப்படையான முறையில் தமிழக அரசு அவற்றைக் கொள்முதல் செய்ய வேண்டும்.

மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, ஊரடங்கு கால கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

தொற்று நீடிக்கும் இந்த நேரத்திலும் அதன் தாக்கம் குறைந்த பிறகும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றைப் பின்பற்றி ‘புதிய இயல்பு வாழ்க்கை’வாழத் தயாராகும்படி உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதை மக்கள் கவனத்தில்கொண்டு அந்த வாழ்க்கையை வாழத் தயாராக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே