ராணிப்பேட்டை மாவட்டத்தில், மேலும் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கு அந்த மாவட்டம் மாறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கலெக்டர் திவ்யதர்ஷினி, “ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 39 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 16 நாள்களில் புதியதாக யாருக்கும் தொற்று இல்லை.

இந்த நிலையில், மேல்விஷாரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் மகாராஷ்டிராவிலிருந்து கடந்த 27-ம் தேதி லாரிகளில் இடம்பிடித்து ஊர் திரும்பினார்.

இருமல் காய்ச்சலுடன் வந்த அவரை மாவட்ட எல்லையிலேயே பிடித்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். 

அவரது தொண்டை திரவத்தின் டெஸ்ட் ரிப்போர்ட் நேற்று வந்தது. அதில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக அவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 33 பேர் ஏற்கெனவே பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக ராணிப்பேட்டை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒருவருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் ராணிப்பேட்டை மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கு மாறிவிட்டது.

நம்முடைய மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் நிலையில்தான் இருக்கிறது. சமூகப் பரவலுக்குச் செல்லவில்லை” என்றார்.

ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனன் கூறுகையில்,“இன்று முதல் மாவட்டத்தின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்படுகிறது. வேறு மாவட்டத்திலிருந்து யாரும் உள்ளே வர முடியாது. இங்கிருந்தும் ஒருவரும் வெளியில் போக முடியாது.

ஊரடங்கு முடியும் வரை இந்த நடைமுறை இருக்கும்.

அத்தியாவசியப் பொருள்கள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும்.

ஓட்டுநர், கிளீனரைத் தவிர வேறு யாரும் வாகனங்களில் வரக் கூடாது. வீட்டை விட்டு காரணமின்றி யாரும் வெளியில் வரக் கூடாது.

மதியம் ஒரு மணிக்கு மேல் வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே