தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா – இன்று காலை முதல் யாகசாலை பூஜைகள் ..

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் இன்று நான்காம் கால யாகபூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வதால் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலில் நாளைமறுதினம் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி கடந்த 1 ந்தேதி முதலாம் கால யாக பூஜைகள் தொடங்கியது. இன்று 110 யாக குண்டங்களில், நான்காம் கால யாக பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தி வருகின்றனர்.

ஏராளமான பக்தர்கள் யாகத்துக்கு தேவையான வேதிகை பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.

குடமுழுக்குக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் பாதுகாப்பு பணிக்கு பக்கத்து மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கோவில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மெட்டல் டிடெக்டர் சோதனை தவிர நூறுக்கணக்கான சிசிடிவி கேமராக்களுடன், நவீன சென்சார் கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆலயத்தின் மடப்பள்ளி சுவர்களில் காதல் சின்னம் மற்றும் எழுத்துக்கள், படங்கள் அழிக்கப்படாமல் அப்படியே இருப்பதாகவும்; ஆலயத்தை புதுப்பிக்கும் போது இதை கண்டுகொள்ளாதது ஏன் என்று பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் குடமுழுக்கு தரிசன இலவச விஐபி பாஸ்களை, மொத்தமாக பெற்றுக்கொண்ட சிலர் அதனை விலைக்கு விற்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே