கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து தள்ளிய விவகாரம் தொடர்பாக தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் 3 வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் ஒரு நபரை, மருத்துவமனை ஊழியர் ஒருவர் சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, கட்டிலின் அருகே நிறுத்துகிறார்.
பிறகு சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து கட்டிலுக்கு செல்லுமாறு நோயாளியை வற்புறுத்துகிறார். ஆனால் அந்த நோயாளியால் தாமாக எழுந்து கட்டிலுக்கு செல்ல முடியவில்லை. அதனால் அவர் அந்த மருத்துவமனை ஊழியரை உதவி செய்யுமாறு அழைக்கிறார்.
ஆனால் அந்த ஊழியரோ, நோயாளியிடம் அத்துமீறி பேசி, தகராறு செய்ததுடன், கோபத்தின் உச்சிக் சென்ற அவர், நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அத்துமீறி பேசியவாறே செல்கிறார். இதை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பரப்பியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த செய்தியை அறிந்த மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.