நாளை டி20 தொடர் ஆரம்பம்: இங்கிலாந்தை இறக்கி முதலிடம் செல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என்று கைப்பற்றினால் முதலிடத்துக்கு முன்னேறி இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளும்.

நாளை அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி 20 போட்டி நடைபெறுகிறது. இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா வென்று முதலிடம் செல்ல வாய்ப்புள்ளது.

20 ஓவர் போட்டி அணிக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-3 என்ற கணக்கில் பறிகொடுத்த ஆஸ்திரேலியா தரவரிசையில் ஒரு இடம் சரிந்து 267 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதனால் 3ம் இடத்தில் 268 புள்ளிகளுடன் இருந்த இந்தியா 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து தொடர்ந்து 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

பாகிஸ்தான் 260 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், நியூசிலாந்து 253 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என்று கைப்பற்றினால் முதலிடத்துக்கு முன்னேறி இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளும்.

இங்கிலாந்து அணி முதலிடத்தை தக்கவைக்க குறைந்தது 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் போதும் இதனால் முதலிடத்தை இங்கிலாந்து இழக்காது என்று கருத இடமுண்டு.

20 ஓவர் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் (915 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். நியூசிலாந்து தொடரில் இரண்டு அரைசதம் விளாசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் (830 புள்ளி) இரு இடம் உயர்ந்து 2-வது இடத்துக்கு வந்துள்ளார்.

இதனால் 2-ல் இருந்த இந்தியாவின் லோகேஷ் ராகுல் (816 புள்ளி) 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டூசன் 5-வது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 14-வது இடம் வகிக்கிறார். இங்கிலாந்து தொடரில் ரன்வேட்டை நடத்தினால் இந்திய வீரர்கள் தரவரிசையில் கணிசமாக முன்னேறலாம்.

20 ஓவர் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-10 இடத்தில் எந்த இந்தியர்களும் இடம் பெறவில்லை. இந்திய தரப்பில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 13-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து தொடரில் வாஷிங்டன் சுந்தர் அசத்தினால் டாப்-10 இடத்திற்குள் நுழையலாம்.

தொடரை 4-1 என்று வென்று இங்கிலாந்தின் முதலிட மகுடத்தை இந்திய அணி சாய்க்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க இங்கிலாந்தோ குழிப்பிட்ச் பீதியில் இருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே