கொரோனா எதிரொலி: ஐ.பி.எல்., தொடரை தவிருங்கள்

கொரோனா பாதிப்பு காரணமாக ஐ.பி.எல்., தொடரை நடத்த வேண்டாம் என மத்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் வரும் மார்ச் 29ம் தேதி துவங்க உள்ளது. மும்பையில் நடக்கவுள்ள முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதவுள்ளன.

இதனிடையே சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது.

உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரசை, மிகப்பெரிய தொற்று என அறிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா, கர்நாடக அரசுகள் ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த மறுப்பு தெரிவித்துள்ளன. தவிர மும்பை-சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனைக்கும் மஹாராஷ்டிரா அரசு தடை விதித்தது.

இதனிடையே மத்திய சுகாதாரத்துறை சார்பில் இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதம் அனுப்பப்பட்டது.

இதில், விளையாட்டு போட்டிகளின் போது ரசிகர்கள் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை தவிர்க்க முடியவில்லை என்றால் பார்வையாளர்களை அனுமதிக்காமல் போட்டியை நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு கூறுகையில், வீரர்கள் விளையாடுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. ஆனால் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.

மத்திய அரசின் கடிதத்தை அடுத்து வரும் ஐ.பி.எல்., தொடரில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்த பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.

இருப்பினும் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரும் ஏப். 15ம் தேதி வரை இந்தியா வரவுள்ள அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கான விசாக்களையும் அரசு ரத்து செய்துள்ளது.

ஐ.பி.எல்., தொடரின் 8 அணிகளில் இடம் பெற்றுள்ள 60க்கும் மேற்பட்ட அன்னிய வீரர்கள் முதல் இரு வாரங்கள் இந்தியா வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரசிகர்கள் இல்லாமல் கூட போட்டிகள் நடத்தலாம், அன்னிய வீரர்கள் இல்லை என்றால் எப்படி தொடரை நடத்துவது என பி.சி.சி.ஐ., குழப்பத்தில் உள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில்,’ஐ.பி.எல்., நடத்துவதா, வேண்டாமா என அந்த நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். எங்களைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்று தான் சொல்கிறோம். ஆனால் போட்டியை நடத்த விரும்பினால் அது அவர்கள் முடிவு,’ என தெரிவித்தது.

கொரோனா பரவல் காரணமாக, மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என ‘அட்வைஸ்’ தரப்படுகிறது.

இதனால் ஐ.பி.எல்., தொடரை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய ‘பென்ச்’ முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதுகுறித்து விளக்கம் தருமாறு மத்திய சுகாதாரத்துறை, பி.சி.சி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விசாரணை 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.பி.எல்., தொடரின் நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடக்கவுள்ளது.

இதில், தொடரை ரத்து செய்வதா அல்லது தள்ளிவைப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே