இடமாற்று கடை திட்டம் : சென்னை மாநகராட்சியின் முயற்சிக்கு பெருகும் பாராட்டு

போகி பண்டிகையை முன்னிட்டு, பழைய பொருட்களை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவிடும் வகையில், சென்னை மாநகராட்சியின் இடமாற்று கடை திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு நாளை ஒருநாளே உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிக்கைக்கு முந்தைய நாள் போகிப்பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த போகி பண்டிகையன்று மக்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்துவது வழக்கமான செயலாகும்.

பெரும்பாலும் பொருளாதாரத்தில் ஓரளவு நிறைவைப் பெற்றவர்களே வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்துவது வழக்கம்.

அன்றாட உணவிற்கும், தினசரி வாழ்க்கையை கழிப்பதற்கும் போராடும் லட்சக்கணக்கான ஏழை மக்களின் வீடுகளில் பழையப்பொருட்கள் இருந்தாலும் பொருளாதார நிலையின் காரணமாக பெரும்பாலும் போகிப்பண்டிகை கொண்டாடுவது இல்லை.

மேலும் பழையப்பொருட்களை ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுசூழலும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் போகிப்பண்டிக்கைக்கு பழைய பொருட்களை எரிக்காமல் அதனை ஏழைமக்களுக்கு கொடுத்து உதவும் திட்டத்தினை சென்னை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் படி, இடமாற்று கடை திட்டத்தின் மூலம் தங்களிடம் இருக்கும் பழைய பொருட்களை ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் விற்கலாம்.

பழைய பொருட்களை விற்பனை செய்வதற்கு சென்னை பெசண்ட் நகர் பேருந்து நிலையம் அருகே வீட்டு வசதி வாரிய சமுதாய நலக்கூடத்தில் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களுக்கு வேண்டாம் என ஒதுக்கும் பொருட்களை, குறைந்த விலைக்கு ஏழை மக்களுக்கு கொடுத்து வருவது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே