கோழிக்கறி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு வராது : உடுமலை ராதாகிருஷ்ணன்

பறவைக் காய்ச்சல் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை, கட்டாலங்குளத்தில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள 2 ஊராட்சிகளில் செயல்பட்ட கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் இருப்பதை அறிந்து அந்த மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அங்கு சென்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் அந்த இரண்டு ஊராட்சிகளிலும் உள்ள கோழிகள் அழிக்கப்பட்டுவிட்டன.

தமிழகத்தில், 26 இடங்களில் சுகாதாரத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மருத்துவ குழுக்களின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் மூலம் இங்கிருந்து கேரளாவுக்கு கோழிகள் மற்றும் முட்டைகள் கொண்டு சென்று இறக்கி விட்டு திரும்பி வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கோழி வளர்ப்பு தொழில் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகமும் கோழி வளர்ப்பு தொழில் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானத்தை பெற்று வருகிறது.

கொங்கு மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. எவ்வித அச்சமும் தேவையில்லை.

பறவைக் காய்ச்சல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

அதனால் கறிக்கோழி இரண்டு முட்டைகளை சாப்பிடுபவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என சுகாதாரத் துறை மேற்கொண்ட ஆய்வு மூலமாக தெரியப் படுத்தப் பட்டுள்ளது.

எனவே பறவை காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை.

கால்நடை மருத்துவத் துறையில் ஏற்கனவே 650 மருத்துவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அப்போது கால்நடை கிளைகள், கால்நடை மருந்தகங்கள் அதிகளவில் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தேவை அதிகமாக உள்ளதால் இன்னும் 200 மருத்துவர்கள் வருகிற ஆண்டிலேயே நியமிக்க தேவையான பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தமிழகம் முழுவதும் ரூ.43 கோடியில் இந்த ஆண்டு 108 இடங்களில் கால்நடை மருந்தகங்கள் கட்டுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் ரூ.65 லட்சத்தில் கால்நடை மருத்தக கட்டடத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட்ட உள்ளது.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தை பொருத்தவரை நான் தலைவராக பொறுப்பேற்கும் முன்பு 35 லட்சமாக இருந்த இணைப்புகள் 18 லட்சம் ஆக குறைந்து இருந்தன.

தற்போது அது 28 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்னும் அதிகளவில் செட்டாப் பாக்ஸ்கள் வேண்டும் என கூறியுள்ளனர்.

இன்னும் 10 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் 15 நாட்களில் வாங்க உள்ளோம்.

அதன் பின்னர் தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் அரசு கேபிள் டிவிகள் இல்லையோ அங்கெல்லாம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும்.

கரோனா வைரஸ் மற்றும் பறவைக் காய்ச்சல் குறித்து வதந்தி பரப்பும் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏனென்றால் வருமுன் காக்கும் பணிகளை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே தேவையற்ற வதந்திகளை பரப்ப கூடாது. அதேபோல் தேவையற்ற வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம்” என்றார் அவர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே