அண்ணா பல்கலைக்கழகத்தை தலைசிறந்த பல்கலைக்கழகமாக மாற்றியவர் சூரப்பா : தமிழக ஆளுநர் புகழாரம்

அண்ணா பல்கலைக்கழகத்தை தலைசிறந்த பல்கலைக்கழகமாக மாற்றியவர் துணை வேந்தர் சூரப்பா என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியான அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் 75-வது ஆண்டு விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் தலைசிறந்த முன்னாள் மாணவர்களான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், ஸ்ரீனிவாசன் கே.சுவாமி உள்ளிட்ட 12 பேருக்கு விருதுகளை வழங்கினார்.

அதன் பின்னர் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மேம்படுத்த தொழிலதிபர்கள் உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொது வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் வெளிப்படைத்தன்மையுடன் வாழ்ந்தால் மட்டுமே சிறப்பான வாழ்வை வாழ முடியும் என குறிப்பிட்டார்.

ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க இன்றைய மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், இந்தியாவிலேயே தலைசிறந்த மாநில அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகத்தை மாற்றியவர் துணைவேந்தர் சூரப்பா என்று புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே