உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் முகுல் ரோத்தஹி வாதிட்டார்.
ஆன்லைனில் மது விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அது தொடர்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
“ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை ஏற்பாடு உள்ளது. ஆனால், ஆன்லைனில் தற்போது மது விற்பனை சாத்தியமில்லை.
தமிழகம், டெல்லி போன்ற சிறிய மாநிலம் இல்லை. ஒருவர் மது பாட்டில்களை எடுத்துச் செல்கிறார் என்றால், அதில் பல ஆபத்துக்கள் உள்ளன.
ஆன்லைனில் விற்பனை செய்தால் கலப்பட மது விற்பனை செய்ய வாய்ப்பு உண்டு. மேலும் மது கடத்தல் அதிகரிக்கும். மேலும் டாஸ்மாக் திறக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு.
மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்” என்றார்.
உயர்நீதிமன்ற விசாரணையின் போது தமிழக அரசு விரிவான பதிலளிக்க அவகாசம் கோரிவிட்டு, தற்போது உச்சநீதிமன்றத்தில் கடைகளை திறக்க வேண்டும் என கோருவது வரம்பு மீறல் என்று எதிர்த்தரப்பில் வாதிடப்பட்டது.
விசாரணை முடிவில் விரிவான உத்தரவு மாலை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.