நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை பெற்ற 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 2 பேரின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில், 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார்.

சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதே மாதம் 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் உட்பட, ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.

இதில், சிறுவனுக்கு மட்டும், சிறார் சட்டப்படி, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, மற்ற ஐந்து பேரில் ராம் சிங் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

எஞ்சிய 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தங்கள் தண்டனையை ரத்து செய்யக்கோரி, குற்றவாளிகள் வினய் சர்மா, முகேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த சீராய்வு மனுக்களை  தள்ளுபடி செய்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, வரும் 22-ம் தேதி காலை 7 மணிக்கு 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.

இறுதி முயற்சியாக குற்றவாளி முகேஷ் சிங் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே