சுஜித்தின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக 20 லட்ச ரூபாய் வழங்கப்படும் : எடப்பாடி பழனிசாமி

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும், அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் குழந்தை சுஜித்தின் பெற்றோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

சுஜித்தின் உருவப்படத்திற்கும் மலர் தூவி முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க அரசு சார்பில் முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

இதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் ஓஎன்ஜிசி அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவை சார்பில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

மீட்புப் பணியில் மெத்தனம் என்ற மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க தவறானது என்று முதலமைச்சர் மறுத்தார்.

தி.மு.க. ஆட்சியில் தேனியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் இறந்த நிலையில்தான் மீட்கப்பட்டான் என்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அப்போது ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

சுஜித்தின் குடும்பத்திற்கு நிதி உதவியாக அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும், தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். 

ஆழ்துளை கிணறு தொடர்பான விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்திய முதலமைச்சர், இது போன்ற விபத்துகளை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே