2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலுக்கட்டாயமாக கைது

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை பல்கலைக்கழகத்தில் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 17 மாணவர்களை போலீசார் நள்ளிரவில் கைது செய்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட 17 மாணவர்களும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாணவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விடுதியை காலி செய்ய மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

எனினும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தங்கள் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே