சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திடீரென பெய்து வரும் மழை

சென்னையில் இன்று பரவலாக காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்ட நிலையில் தற்பொழுது பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.

சென்னையில், கடந்த சில தினங்களாக கடும் வெயில் அடித்துவந்தது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக, வீட்டில் அடைந்திருக்கும் மக்கள் வெயிலால் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் சென்னை ஆவடி, அம்பத்தூர், கோயம்பேடு, பட்டாபிராம் வில்லிவாக்கம், அண்ணாநகர், கீழ்பாக்கம் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, காசிமேடு மற்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மேலும், எண்ணூர், மணலி ஆகிய இடங்களில் லேசான மழையும், வடபழனி, கோடம்பாக்கம், அசோக் நகரில் குளிர்ந்த காற்றுடன் கன மழை பெய்து வருகின்றது.

வெயிலுக்கு இடையில் மழை பெய்த நிலையில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முன்னதாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சேலம், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே