குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், கர்நாடகாவில் இன்று முதல் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

டெல்லியில் ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள், இரவில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனிடையே டெல்லியில் இரண்டாவது நாளாக நேற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மும்பையில் ஒன்று திரண்ட மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அத்துடன் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு டவுண் ஹாலில் இடதுசாரி கட்சிகள் சார்பில் இன்று போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை கர்நாடகாவில் அமல்படுத்த உள்ளதாக, முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே