திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாள் உற்சவத்தில் குழல் ஊதும் வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் வீதி உலா வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மூன்றாவது நாளான இன்று இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் புல்லாங்குழல் ஊதும் வேணு கோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்தார்.
முத்து எப்படி பரிசுத்தமானதோ அதே போன்று நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் இல்லாமல் பரிசுத்தமாக இறைவனை அடைய வணங்கினால் முக்தி பெறலாம் என்பதை விளக்கும் வகையில் இந்த உலா நடத்தப்படுவதாக ஐதீகம்.
வீதி உலாவில் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் லம்பாடிகள் நடனம் ஆடியபடி வீதிஉலாவில் பங்கேற்றனர்.
வீதியுலாவின்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் ஏழுமலையானை பரவசத்துடன் வணங்கினர்.