மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முப்பெரும் பணிகளில் அழிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள போதிலும், வணங்குவோருக்கு காக்கும் தெய்வமாக வரம் தருகிறார் சிவபெருமான்.

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாகவும், இதேபோன்று சிவராத்திரி நாளில் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்!

சிவராத்திரியையொட்டி இன்று விரதம் இருக்கும் பக்தர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து ஓம் நமச்சிவாய என சிவபெருமானின் திருநாமத்தை ஜபிக்கின்றனர்.

தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடியும், சிவனுக்கு பூஜைசெய்தும் வழிபாடு நடத்துகின்றனர்.

மகாசிவராத்திரியையொட்டி மயிலை கபாலீஸ்வரர் , காஞ்சி ஏகாம்பரேஸ்வர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சிதம்பரம் நடராஜர், மதுரை சுந்தரேஸ்வரர், நெல்லையப்பர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே