திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது பரணி தீபம்…!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் இன்று ஏற்றப்படுவதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக கோவிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இதை முன்னிட்டு, அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் காட்சியளித்ததும் சரியாக மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.

மகா தீபம் ஏற்றுவதற்காக 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

கொப்பரை சுமந்த சென்றவர்கள் அருணாச்சலேஸ்வரா அருணாச்சலேஸ்வரா என பயபக்தியுடன் வேண்டிய படியே மலையேறினர்.

தீபம் ஏற்றுவதற்காக பக்தர்கள் மற்றும் ஆவின் நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் அடுத்தடுத்து மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டன.

மகா தீபத்தை காண 2,500 பேர் மலை மீது ஏறிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றும் பொருட்களை மலைமீது எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்ய உள்ளதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடக்குமண்டல காவல்துறை தலைவர் நாகராஜ் தலைமையில் 8500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிரிவலப் பாதையை சுற்றிலும் 275 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. கூட்டநெரிசலால் காணாமல் போகும் சிறுவர்களை பேஸ் டேகர் கருவி மூலம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வசதிக்காக 2,600 சிறப்பு பேருந்துகள், 22 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

16 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள், 52 இடங்களில் கார் பார்க்கிங், 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கிரிவலப் பாதை வரை மினிபேருந்துகள் மூலம் பக்தர்களை அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரமான முறையில் அன்னதானம் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மகாதீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே