SSI வில்சன் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அரிவாளால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகியோரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த இருவரும் 3 நாட்கள் காவல் முடிந்து திங்கட்கிழமை நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

போலீசார் தரப்பில் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க 28 நாட்கள் கேட்டு மனு அளிக்கப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கஸ்டடியில் பாதுகாப்பு இருக்காது என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படாததால், அவர்களை கஸ்டடியில் எடுக்க வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உத்தரவை செவ்வாய்கிழமை மாலை 3 மணிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி இரண்டாவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே