சேலம் 108.4, தருமபுரியில் 105.8 டிகிரி வெப்பம் பதிவு: அனல் காற்றினை சமாளிக்க முடியாமல் மக்கள் தவிப்பு

சேலத்தில் நேற்றைய பகல் நேர அதிகபட்ச வெப்பம் 108.4 டிகிரியாக பதிவானது. தொடர்ந்து 3 நாட்களாக 105 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிப்பதால், அனல் காற்று வீசி மக்கள் பகலில் நடமாட முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.

கோடைகாலம் தொடங்கியதில் இருந்தே, சேலத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாகவே இருந்து வந்தது. அதிகமாக 103 டிகிரி வரை வெப்பம் இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக, வெயிலின் தாக்கம் திடீரென அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 31-ம் தேதி அதிகபட்சமாக 109.1 டிகிரியாக உயர்ந்த வெயிலின் தாக்கத்தால் மக்கள் திணறிப் போயினர். இது நேற்று முன்தினம் 106.7 டிகிரியாக சற்றே குறைந்தது. இதனால், வெயிலின் தாக்கம் இனி சற்று குறையும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சேலத்தில் வெயிலின் தாக்கம் நேற்று மீண்டும் அதிகரித்து, 108.4 டிகிரியாக உயர்ந்தது. இதனால், பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. மக்கள் நடந்து செல்ல முடியாமலும், இரு சக்கரவாகனத்தில் செல்ல முடியாமலும் திணறினர். வெயிலின் தாக்கத்தை குறைத்திட, கோடை மழை பெய்யாதா என்ற ஏக்கம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் நேற்று 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி 102.2 டிகிரி அளவுக்கு வெப்பநிலை பதிவானது. 31-ம் தேதி 105.9 டிகிரி அளவுக்கு இந்த வெப்பநிலை உயர்ந்தது. பின்னர் கடந்த 1-ம் தேதி 103.6 டிகிரி அளவுக்கு வெப்பநிலை சற்றே தணிந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் வெப்ப நிலை அளவு உயர்ந்தது. நேற்று 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவுக்கு வெப்பநிலை பதிவானது. அதிகரித்த வெப்பநிலையால் நேற்று பகலில் தருமபுரி மாவட்டத்தில் அனல்காற்று வீசியது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக இரவிலும் அதன் தாக்கம் கடுமையாக நிலவி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே