பாஜக குறித்து விஷமத்தனமான பிரச்சாரம் நடக்கிறது: வானதி குற்றச்சாட்டு

பாஜக குறித்து விஷமத்தனமான பிரச்சாரம் நடக்கிறது என்று அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் கடந்த மாதம் 31-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் கோவை வருகையை முன்னிட்டு, கடையை மூட வலியுறுத்தி சிலர் கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சிலர் தங்களுக்கிடையே பேசிக்கொண்ட வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாகக் கோவையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”சாதாரணமாக நடைபெற்ற வாக்குவாதத்தை வைத்து பாஜக குறித்து தவறான பிரச்சாரம் நடக்கிறது. சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. அதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆனால், பாஜக வந்தால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று விஷமத்தனமான பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். நான் இதுகுறித்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க உள்ளேன்.

எங்களின் அடையாளம் கொண்ட டி-ஷர்ட், கொடி, தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்துகொண்டு விரும்பத்தகாத செயல்களில் சில நபர்கள் ஈடுபடப்போவதாகவும் எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. அதிலும் குறிப்பாகச் சில அரசியல் கட்சிகள் இதில் ஈடுபட உள்ளனர். இது தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும். எங்களின் வீது வீணான பழியையும் கொண்டு வரும்.

மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற விவகாரங்களைத் தகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியரின் மனு அளிப்பேன்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே